ஒருமுறை சோழ நாட்டு மன்னனிடம் கணக்கராக பணிபுரிந்து வந்த சுதன்மன் என்பவர் காட்டிய கணக்கில் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரியான கணக்கைக் காட்டியும், மன்னன் ஐயம் கொண்டதை எண்ணி வருந்திய சுதன்மன் ஈசனை வணங்கி வேண்டினார். இறைவன் சுதன்மன் வடிவத்தில் மன்னனிடம் சென்று அவனது ஐயத்தைப் போக்கினார்.
சிறிது நேரம் கழித்து சுதன்மன் அரண்மனைக்குச் சென்று மன்னனிடம் மீண்டும் கணக்கைக் காண்பித்தார். "இப்போதுதானே காட்டிவிட்டு சென்றீர்கள், மீண்டும் ஏன் காட்டுகிறீர்?" என்று வினவ, அப்போதுதான் இறைவனே தனக்காக வந்ததை அறிந்தார் சுதன்மன். நடந்ததை அறிந்த மன்னன், சுதன்மனிடம் மன்னிப்புக் கேட்டு, அவனது ஊரில் சிவபெருமானுக்கு ஒரு கோயிலும் எழுப்பினான். 'இந்த தலமே 'இன்னம்பூர்' என்று அழைக்கப்படும் தலமாகும். சுவாமிக்கும் 'எழுத்தறிநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. சூரியன் வழிபட்டதால் இன்னம்பர் (இனன்-சூரியன்) என்ற பெயர் பெற்றது.
மூலவர் 'எழுத்தறிநாதர்' என்னும் திருநாமத்துடன், உயரமான பாணத்துடன், மிகப்பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'சுகந்த குந்தளாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். நித்ய கல்யாணி என்னும் மற்றொரு அம்பிகையின் சன்னதியும் உள்ளது.
கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியும், கல்லினால் ஆன நடராஜர் சிலையும் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்ததால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இங்கு வந்து அர்ச்சனை செய்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நெல்லில் எழுத (அட்சரம்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் சுவாமிக்கு 'அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.
மேலும் திக்கு வாய் இருப்பவர்கள், பேச்சுத் திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அவர்கள் குரல்வளம் நன்றாக அமையும் என்றும் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
சூரியன் வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள மூலவர் மீது ஆவணி மாதம் 31ம் தேதி, புரட்டாசி 1 மற்றும் 2 தேதிகளிலும், பங்குனி மாதம் 13 முதல் 15ம் தேதி வரையிலும் காலை வேளையில் சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஐராவதமும் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். |